search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அத்திக்கடவு அவினாசி திட்டம்"

    • அத்திக்கடவு அவிநாசி திட்டப் பணிகள் கடந்த ஆட்சியில் 90 சதவீதம் முடிக்கப்பட்டது.
    • நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்தார்.

    சென்னை:

    சட்டப்பேரவையில் வினாக்கள் விடை நேரத்தில் பேசிய அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன், அத்திக்கடவு அவிநாசி திட்டப் பணிகள் கடந்த ஆட்சியில் 90 சதவீதம் முடிக்கப்பட்டது என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளில் மீதமுள்ள 10சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டது என்றார்.

    சோதனை ஓட்டத்தில் ஒரு சில ஏரி, குளங்களுக்கு தண்ணீர் வரவில்லை என கூறிய அவர், விடுபட்டுள்ள ஏரி குளங்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பெரும்பாலான பணிகள் முடிந்துள்ளதாகவும், ஒரு சில இடங்களில் பைப் இணைப்பு நடந்து வருவதாகவும், விரைவில் அத்திக்கடவு அவிநாசி திட்ட தொடக்க விழா நடைபெறும் எனவும் உறுதி அளித்தார்.

    அதேபோல், சேலம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டப்பேரவை தொகுதிகளில் 100 ஏரிகளுக்கு நீர் ஏற்றும் திட்டம் கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாகவும், தற்போது இந்த திட்டம் சுணக்கமாக செயல்பட்டு கொண்டிருப்பதால் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் அளித்தார்.

    • கீழ்பவானி பாசன பகுதியில் முதல்கட்டமாக 6 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது.
    • டாஸ்மாக் மது பார்கள் ஏலம் விடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஈரோடு:

    கீழ்பவானி பாசன பகுதியில் நெல் அறுவடை பணிகள் தொடங்கி உள்ள நிலையில் ஈரோடு மாவட்டத்தில் முதல்கட்டமாக நசியனூர், நாதிபாளையம், கூகலூர், புதுவள்ளியம் பாளையம், அளுக்குளி மற்றும் கலிங்கியம் ஆகிய 6 இடங்களில் இன்று முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் திறக்கப்பட்டுள்ளன.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். அமைச்சர் சு.முத்துசாமி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து வைத்தார். இந்த மையங்களில் முதல் தர நெல் குவிண்டால் 2310 ரூபாய்க்கும், பொது ரக நெல் குவிண்டால் 2265 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது.

    பின்னர் அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கீழ்பவானி பாசன பகுதியில் முதல்கட்டமாக 6 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் தொடங்கப்பட்டுள்ளது. படிப்படியாக அறுவடை கூடும் இடங்களில் மொத்தமாக 51 இடங்களில் நெல் கொள்முதல் மையங்கள் அமைக்கப்படும். இங்கு முதல் தர நெல் 23 ரூபாய் 10 காசுகளும், பொது ரகத்திற்கு 22.65 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு 1 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு பணிகளில் இருதரப்பு விவசாயிகளும் சமாதானம் அடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம். வேறு உள்நோக்கம் ஏதும் கிடையாது. கடைமடை பகுதிக்கு தண்ணீர் சீராக சென்றடைய வேண்டும்.

    இதற்காக நீதிமன்ற உத்தரவை பின்பற்றி சீரமைப்பு திட்டத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். நீதிமன்ற அவதிப்பு எதுவும் செய்யவில்லை. அத்திகடவு-அவினாசி திட்டத்தில் இன்னும் 16 குளங்கள் மட்டுமே சோதனை நடத்தப்பட வேண்டி உள்ளது. ஒரு வார காலத்திற்குள் இந்த பணிகள் முடிக்கப்படும்.

    டாஸ்மாக் மது பார்கள் ஏலம் விடுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. நீதிமன்ற உத்தரவுப்படி ஏலம் விடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பல்வேறு இடங்களில் பொதுமக்கள் புகார் அடிப்படையில் டாஸ்மாக் கடைகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், 50 லட்சம் பொதுமக்களும் இத்திட்டத்தில் பயன் பெறுவார்கள்.
    • ஈரோடு மாவட்டத்தில் உள்ள 5 நீரேற்று நிலையங்களிலும் கடந்த ஒரு மாத காலமாக வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

    அன்னூர்:

    கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் போதிய மழை இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டது.

    நீர்மட்டமானது 1,200 அடிக்கும் கீழ் சென்றுவிட்டதால் இங்குள்ள பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் அனைத்தும் தரிசாக மாறிவிட்டன.

    விவசாயமும் குறைந்த அளவிலேயே நடந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்தனர்.

    இதற்கு மாற்றாகவும், தீர்வு காணும் வகையிலும் பவானி ஆற்று உபரி நீரை பயன்படுத்தி, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள 1,045 குளங்கள், குட்டைகளை நிரப்ப முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக ரூ.1,657 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டு அத்திக்கடவு-அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டப்பணி கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. தற்போது இந்த பணிகள் அனைத்தும் 98 சதவீதம் முடிவடைந்துள்ளது.

    945 கிலோமீட்டர் தூரத்திற்கு பிரதான குழாய்களும், கிளைக்குழாய்களும் பதிக்கப்பட்டுள்ளன. இதில் 1,045 குளம், குட்டைகளுக்கு ஆண்டுக்கு 1.5 டி.எம்.சி. தண்ணீர் நிரப்பப்பட உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் 5 இடங்களிலும், கோவையில் அன்னூர் அருகே குன்னத்தூராம்பாளையத்திலும் நீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த திட்டம் மூலம் 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்களும், 50 லட்சம் பொதுமக்களும் பயன் பெறுவார்கள்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள 5 நீரேற்று நிலையங்களிலும் கடந்த ஒரு மாத காலமாக வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. ஈரோடு காளிங்கராயன் அணைக்கட்டில் இருந்து நீர் வெள்ளோட்டம் விடும் பணி நடந்து வருகிறது.

    கடந்த வாரம் 5-வது நீரேற்று நிலையமான எம்மாம்பூண்டியில் இருந்து நீர் வெள்ளோட்டம் விடப்பட்டது. இந்த நீர் நேற்று மதியம் 6-வது நீரேற்று நிலையமான அன்னூர் நீரேற்று நிலையத்திற்கு வந்தது.

    அத்திக்கடவு திட்ட உதவி பொறியாளர் கவிதா மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் வெள்ளோட்ட பணியை கண்காணித்தனர்.

    நீரேற்று நிலையத்துக்கு அத்திக்கடவு-அவினாசி நீர் வந்த தகவல் அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், அத்திக்கடவு-அவினாசி திட்ட ஆர்வலர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் என ஏராளமானார் நீரேற்று நிலையத்தில் குவிந்தனர். அவர்கள் பூக்கள் தூவி நீரினை வரவேற்றனர்.

    அத்திக்கடவு-அவினாசி திட்டத்துக்காக 60 ஆண்டுகளாக பலகட்ட போராட்டங்களை நடத்தி உள்ளோம். அந்த போராட்டங்களின் விளைவாக அத்திக்கடவு நீர் எங்கள் பகுதிக்கு வந்துள்ளது. இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

    இந்த நீர் வந்ததன் காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாய பரப்பும், கால்நடை வளர்ப்பும் இங்கு அதிகரிக்கும்.

    இதுதவிர குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும். விரைவில் விடுபட்ட குளங்களுக்கும் அத்திக்கடவு திட்ட நீர் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    அன்னூர் நீரேற்று நிலையத்திற்கு வந்த நீர், நீரேற்று நிலையம் நிறைந்ததும், அங்கிருந்து அருகே உள்ள குன்னத்தூராம்பாளையம் குளத்திற்கு தண்ணீர் சென்றது. மாலை வரை குளத்துக்கு தண்ணீர் செல்வதை மக்களும், விவசாயிகளும் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருந்துறையில் இருந்து சேனடோரியம், சீனாபுரம் வழியாக கிரே நகர் பகுதிக்கு சென்றார்.
    • அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் 4-வது பம்பிங் ஸ்டேஷன் அமைந்துள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஈரோடு:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்று பயணமாக நேற்று ஈரோடு மாவட்டத்துக்கு சென்றார். அவருக்கு மாவட்ட எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பொதுமக்களின் வரவேற்பை பெற்றுக்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோபி செட்டிபாளையத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் சிறிது நேரம் ஓய்வு எடுத்தார்.

    அதனைத்தொடர்ந்து மாலை 4.30 மணி அளவில் கோபிசெட்டிபாளையம் அடுத்த கள்ளிப்பட்டியில் அமைக்கப்பட்டு இருந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 8 அடி உயர முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைத்தார்.

    பின்னர் கலைஞர் படிப்பகத்தையும் திறந்து வைத்து பொதுமக்கள் மத்தியில் பேசினார். அதைத் தொடர்ந்து தி.மு.க. சுற்றுச்சூழல் அணி சார்பாக ஒரு லட்சம் மரக்கன்றுகளை மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    பின்னர் நிகழ்ச்சியை முடித்து கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவு ஈரோட்டில் உள்ள காலிங்கராயன் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

    முன்னதாக ஈரோட்டுக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொட்டும் மழையிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அத்திகடவு-அவினாசி திட்ட பணிகளை பார்வையிடவும், நலத்திட்ட உதவிகள் வழங்கவும் இன்று காலை பெருந்துறை பகுதிக்கு புறப்பட்டார். முதல்-அமைச்சரை வரவேற்று வழி நெடுகிலும் வாழை தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தன. சாலையின் இருபுறமும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று முதல்-அமைச்சரை வரவேற்றனர்.

    அவர்களை பார்த்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உற்சாகமாக கை அசைத்தார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருந்துறையில் இருந்து சேனடோரியம், சீனாபுரம் வழியாக கிரே நகர் பகுதிக்கு சென்றார். அங்கு அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் 4-வது பம்பிங் ஸ்டேஷன் அமைந்துள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிகாரிகளிடம் திட்டங்கள் குறித்து கேட்டு அறிந்தார். விவசாயிகளையும் சந்தித்து பேசினார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பெருந்துறை, சேனடோரியம் பை-பாஸ் ரோடு வழியாக கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை சரளையில் நலத்திட்ட உதவிகள் நடைபெறும் விழா மேடைக்கு சென்றார்.

    முதல்-அமைச்சரை பார்த்ததும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாகம் மிகுதியால் கரகோஷம் எழுப்பி அவரை வரவேற்றனர். அதனால் அந்த இடமே அதிர்ந்தது.

    அதன் பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.167.50 கோடி மதிப்பில் 63 ஆயிரத்து 858 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட சோலார் பகுதியில் புதிய பஸ்நிலையம் அமைக்கும் பணி, அந்தியூர் அருகே உள்ள தேவர் மலையில் தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளியில் 3 கூடுதல் வகுப்பறை, பெருந்துறை அருகே உள்ள கைக்கோளப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 2 உயர்நிலைப்பள்ளி கட்டும் பணி.

    சென்னிமலை ஆரம்ப சுகாதார வளாகத்தில் சித்தா கட்டிடம் கட்டும் பணி, சத்தியமங்கலம் தாலுகாவில் அரசு அண்ணா மருத்துவமனை, கொமாரபாளையத்தில் சித்தா கட்டிடம் கட்டும் பணி, எழு மாத்தூர் ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் இந்திய சித்த மருத்துவ சேவை, யோகா மருத்துவத்துக்கான கூடுதல் கட்டிடம் கட்டும் பணி உள்பட ரூ.183.70 கோடி மதிப்பில் 1,761 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

    இதேபோல் ஈரோட்டில் கட்டப்பட்டு உள்ள அப்துல்கனி ஜவுளி வணிக வளாகம், ஈரோடு காளை மாட்டு சிலை அருகில் கட்டப்பட்டு உள்ள புதிய வணிக வளாகம், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிகவியல் பூங்கா.

    கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் குடிநீர் வினியோக முறையை மேம்படுத்துதல் உள்ளிட்ட ரூ.261.57 கோடி மதிப்பில் முடிவுற்ற 135 பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் விழா சிறப்புரையாற்றினார்.

    ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தலைமையில் 2,200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    ஈரோட்டில் நிகழ்ச்சியை முடித்து கொண்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கார் மூலம் கோவை செல்கிறார். பின்னர் மாலையில் தனியார் கல்லூரியில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் இரவு 8.35 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்படுகிறார்.

    ×